மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிரான அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் நஸ்ராபூர் பகுதியில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமையின் சுவடு மாறுவதற்குள், தற்போது காத்ரஜ் ஆம்பேகான் பத்தர்  பகுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாதா பிதா குரு தெய்வம் என்பதில் குருவுக்கு முதலிடம் கொடுக்கும் நமது சமூகத்தில், ஆசிரியர் என்ற புனிதமான தொழிலுக்கே கலங்கம் விளைவிக்கும் வகையில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட டியூஷன் மாஸ்டரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

காத்ரஜ் பகுதியைச் சேர்ந்த ஆரிப் சையத் என்ற நபர் தனியார் டியூஷன் கிளாஸ் நடத்தி வருகிறார். இவரிடம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி சிறு வயது முதலே படித்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தாருடன் இந்த ஆசிரியருக்கு நல்ல குடும்பப் பழக்கம் இருந்துள்ளது. இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஆரிப் சையத், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளின் போது மவுஸ் மற்றும் கீபோர்டைப் பயன்படுத்துவது போல சிறுமியை அநாகரிகமாகத் தொட முயன்றுள்ளார். தெரிந்த ஆசிரியர் என்பதால் தற்செயலாக நடக்கும் என்று நினைத்து சிறுமியும் ஆரம்பத்தில் இதைத் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமி ஆன்லைன் மதரஸா வகுப்பிற்காக ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும், “மிகவும் தாமதமாகிவிட்டது, இன்று இரவு இங்கேயே தங்கு, காலை உன்னை வீட்டில் விடுகிறேன்” என்று ஆசிரியர் கூறியுள்ளார். ஆசிரியரின் மகளும் வீட்டில் இருந்ததாலும், வழக்கமாக மற்ற மாணவர்களும் அங்கு தங்குவது வழக்கம் என்பதாலும் சிறுமியின் தந்தையும் இதற்குச் சம்மதித்துள்ளார். அன்று இரவு அனைவரும் ஹாலில் படுத்து உறங்கியுள்ளனர். நள்ளிரவில் யாரோ தன்னை அநாகரிகமாகத் தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்த சிறுமிக்குத் பேரதிர்ச்சி காத்திருந்தது. அருகில் அந்த ஆசிரியர் அமர்ந்திருப்பதைப் பார்த்து பயந்துபோன சிறுமி, பயத்திலும் அதிர்ச்சியிலும் இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டே அமர்ந்திருந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தச் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த அவரது மூத்த அக்கா, அவரைத் தனிமையாக அழைத்து அன்போடு விசாரித்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளார். உடனே அக்கா இதுகுறித்து தந்தையிடம் கூற, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரடியாக ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஆரிப் சையத் தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால், ஒரு ஆசிரியரே இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதை அறிந்ததும் அங்கிருந்த உள்ளூர் பொதுமக்களின் பொறுமை எல்லையைத் தாண்டியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அந்த கா ஆசிரியர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரைத் தீவிரமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.