காலம் எல்லாவற்றையும் கடந்து போகச் செய்யும் என்பார்கள், ஆனால் சில பாவங்களின் கறைகளை அது ஒருபோதும் துடைப்பதில்லை. 1987 ஜனவரி 11-ஆம் தேதியின் அந்த இருண்ட இரவில், கேரளா கொல்லம் மாவட்டத்தின் ‘வெளியம்’ கிராமத்தில் விதி ஒரு கோரமான விளையாட்டை விளையாடியது. கள்ளச்சாராய வியாபாரியான சந்திரசேகரன், போலீஸுக்கு பயந்து தன் மைத்துனன் மோகனனின் வீட்டைப் பயன்படுத்திய விவகாரம் இருவருக்குள்ளும் ஒரு பெரும் தீயாக மூண்டது. வார்த்தைகள் வெடித்து, கோபம் தலைக்கேறிய அந்த கணத்தில், மோகனன் பக்கத்து வீட்டில் இருந்து எடுத்து வந்த அரிவாளால் சந்திரசேகரனின் கழுத்தை அறுத்துச் சாய்த்தான்.  மைத்துனனின் உடலையும், ரத்தம் படிந்த  அந்த ஆயுதத்தையும் அங்கேயே போட்டுவிட்டு, இருளின் துணையோடு மோகனன் ஓடிய ஓட்டம், ஒரு தசாப்தமல்ல… சுமார் நான்கு தசாப்தங்கள் நீடித்தது.

சட்டத்தின் கைகளில் இருந்து தப்பிக்க மோகனன் தனக்குத்தானே ஒரு புதிய பிறப்பை உருவாக்கிக் கொண்டான். போலீஸார் அவனைக் தேடி மும்பை வரை அலைந்து ஓய்ந்து, வழக்கை தற்காலிகமாக முடித்தபோது, மோகனன் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் ‘ராஜன் கேசவன்’ என்ற புதிய அடையாளத்தோடு உலா வந்துகொண்டிருந்தான். ஆதரவற்றவனாக நடித்து, கோட்டயத்தைச் சேர்ந்த வல்சா என்ற ஏழைப் பெண்ணின் குடும்பத்தாரிடம் பரிதாபத்தைப் பெற்று அவளையே திருமணமும் செய்துகொண்டான். இரண்டு பிள்ளைகள், போலி அடையாள அட்டைகள் என மிக நேர்த்தியாகத் தன் கடந்த காலத்தை அழித்துவிட்டு, ஒரு ரப்பர் தோட்டத்தில் உழைக்கும் சாதாரண குடும்பத் தலைவனாக அவன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்தான். ஆனால், அவனது மனசாட்சியின் ஆழத்தில் புதைந்திருந்த அந்தப் பழைய கொலையாளி, மது அருந்தும் போதெல்லாம் ‘மோகனன்’ என்ற பெயரோடு வெளியே வந்து அவனது குடும்பத்தை அச்சுறுத்திக் கொண்டே இருந்தான்.

போலீஸ் கோப்புகளை தூசி தட்டி மீண்டும் திறந்த அதிகாரி ஷாஜிமோன் ஒருபுறம் துப்பு துலக்கிக் கொண்டிருக்க, விதியின் சக்கரம் மோகனனை நோக்கி நகரத் தொடங்கியது. வயதான காலத்தில், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற மோகனனுக்கு, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை யாரும் அடையாளம் காணப் போவதில்லை என்ற அதீத தைரியம் இருந்தது. அந்தத் திமிரில், தன் பூர்வீகக் குடும்பமான ‘கொடியாட்டு’ குடும்பத்தைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் எதேச்சையாக விசாரிக்கப் போய், அதுவே அவனது வாழ்வின் மிகப்பெரிய வினையாக மாறியது. அவனது நடவடிக்கையில் சந்தேகமடைந்த நபர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க, உடனடியாக விரைந்த தனிப்படை போலீஸார் ஒரு கள்ளுக்கடையில் வைத்து அவனை வளைத்துப் பிடித்தனர். “நான் ராஜன் கேசவன், கடந்த முப்பது வருடமாக இங்கேதான் வாழ்கிறேன்” என்று அவன் நாடகமாடினாலும், அவனது பூர்வீக கிராமத்திற்கு அவனைக் கூட்டிச் சென்று, அவனது சொந்த சகோதரிகள் முன்னிலையில் நிறுத்தியபோது, அந்த முப்பத்தியொன்பது வருடப் பொய் அடியோடு சரிந்து விழுந்தது.

சட்டம் தன் கடமையைச் செய்துவிட்ட போதிலும், அவனது நிஜக் குடும்பம் கொடுத்த மரண அடிதான் அவனுக்குக் கிடைத்த உண்மையான தண்டனை. அவனது பயங்கரமான கடந்த காலத்தைக் கேள்விப்பட்ட அவனது மனைவியும் பிள்ளைகளும் அவனுக்கு உதவ முற்றிலுமாக மறுத்துவிட்டனர். “அவனது குடிப்பழக்கத்தால் பிள்ளைகளின் வாழ்க்கையே பாழாய் போனது, எங்களுக்கென்று ஒரு நிம்மதியான வாழ்வு வேண்டும், அவன் சிறையிலேயே அழுகட்டும்” என்று வல்சா கண்ணீரோடு கூறிய வார்த்தைகள், அவனது போலி சாம்ராஜ்யத்தை சுக்குநூறாக்கியது. தற்போது 64 வயதாகும் மோகனனை மரபணு சோதனை மூலம் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விதியை ஏமாற்றி விடலாம் என்று நினைத்த ஒரு கொலையாளிக்கு, காலமும் அவனது சொந்தக் குடும்பமும் இணைந்து எழுதிய இந்த இறுதித் தீர்ப்பு, எந்தவொரு த்ரில்லர் படத்தையும் விட நெஞ்சை உலுக்கக் கூடிய ஒரு யதார்த்த பாடம்.