கர்நாடகா மாநிலம் தார்வாட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 45 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிரண் ஹொனன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவர், தனது வீட்டின் ஒரு அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அதே வீட்டில் மற்றொரு அறையில் அவருடைய 8 வயது மகன் உடலில் பலத்த கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனுக்கு உயிர் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றச்செயல் தொடர்பாக டாக்டரின் மனைவி பிரியங்கா என்பவரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களும் நண்பர்களும் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை காலையில் டாக்டர் கிரணைத் தொடர்பு கொள்ள முயன்ற போது, பிரியங்கா போனை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகவோ அல்லது பணிக்குச் சென்றுவிட்டதாகவோ கூறி மழுப்பியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் புதன்கிழமை மாலை நேரில் சென்று பார்த்தபோதுதான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் வீட்டிற்குள் நுழைந்த போது, கணவர் மற்றும் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையிலும், குற்றம் சாட்டப்பட்ட பிரியங்கா கட்டிலில் படுத்துக் கொண்டு எவ்வித சலனமும் இன்றி தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் நடந்த போது வீட்டிற்குள் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவர் மட்டுமே இருந்துள்ளனர் என்றும், வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும் போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பிரியங்கா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் சான்றுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
