ஆன்லைன் டெலிவரி தளமான பிளிங்கிட் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்த குருகிராமைச் சேர்ந்த கார்ப்பரேட் பெண்மணி ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மளிகைப் பொருட்களுக்கு நடுவே ரகசியப் புகைப்படங்கள் என்று எழுதப்பட்ட ஒரு உறை இருந்ததைக் கண்டு அவர் முதலில் பதறிப்போனார்.

யாரோ தங்களைப் பின்தொடர்கிறார்களோ அல்லது மிரட்டலுக்கு உள்ளாகப் போகிறோமோ என்ற அச்சத்தில் இருந்த அவர், மிகுந்த தயக்கத்துடன் அந்த உறையைப் பிரித்துப் பார்த்தார்.

உறைக்குள் இருந்த படங்கள் அவரை மேலும் குழப்பமடையச் செய்தன. வீட்டின் அறைகள் கலைந்து போய்க் கிடக்கும் காட்சிகளைப் பிரதிபலிக்கும் அந்தப் படங்கள், பார்ப்பதற்குத் தத்ரூபமாக இருந்ததால், ‘ஒருவேளை நம் வீட்டின் உட்புறப் புகைப்படங்களோ?’ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

இருப்பினும், அந்த உறையின் இறுதியில் இருந்த குறிப்பை வாசித்தபோதுதான், அது ‘ஸ்னாபிட்’ எனும் வீட்டுச் சேவை நிறுவனத்துடன் இணைந்து பிளிங்கிட் மேற்கொண்ட ஒரு விளம்பர உத்தி என்பது தெரியவந்தது.

வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், கலைந்து கிடக்கும் வீட்டின் புகைப்படங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு புதுமையான விளம்பர முயற்சி இது. இது குறித்து அந்தப் பெண் தனது அதிருப்தியைச் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

“என்ன இது போன்ற நடத்தை?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், விளம்பரத்திற்காக மக்களைப் பயமுறுத்துவது எந்த வகையில் நியாயம் என்று தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Urban Ghummakad (@ghummakad22)

“>

இச்சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலர், “இதைப் பார்த்தால் ஏதோ குற்றச் சம்பவத்திற்கான ஆதாரங்கள் போலத் தோன்றுகிறது, இவ்வளவு பயமுறுத்தும் வகையில் விளம்பரம் செய்வதை ஏற்க முடியாது” என்று தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம், சில பயனர்கள் இதேபோன்ற உறைகளைத் தங்களும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். புதுமையாக யோசித்ததாக நினைத்து விளம்பர நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த உத்தி, நுகர்வோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.