உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், நீதிமன்ற வழக்கு ஒன்றில் இருப்பதால் தற்போது பணியில் இல்லை என்றும் நம்ப வைத்துள்ளார்.

இவரின் பொய்யான அடையாளத்தை உண்மை என நம்பிய அபிஷேக் என்ற இளைஞர், அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே, சாதனா தனது கணவரிடம் 40 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதோடு, பணம் தராவிட்டால் குடும்பத்தையே பொய்ப் புகார்களில் சிக்க வைத்து அழித்துவிடுவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண் எந்தவொரு அரசுப் பணியிலும் இல்லை என்பது அம்பலமானது.

பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், அவரைத் தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் பின்னணியை முறையாகச் சரிபார்க்காமல் கண்மூடித்தனமாக நம்புவது, இத்தகைய மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.