தாய்மை என்பது உலகில் மிக உன்னதமான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் தாய்மை ஒரு பெண்ணின் உடல்நலத்தையும், அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காவு வாங்கித்தான் வர வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வியையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பெண்ணின் கதை. 22 வயதே ஆன ஒரு இளம் பெண், அதற்குள் 6 முறை கர்ப்பமடைந்து, தற்போது 5 குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார். ஆனால், இந்தத் தொடர் பிரசவங்களின் வடு, அந்தப் பெண்ணின் உடலில் மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 22 வயதே ஆன அந்தப் பெண், இப்போது பார்ப்பதற்கு 42 வயது முதிர்ந்த பெண்மணி போல காட்சியளிக்கிறார். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், 5 குழந்தைகளுக்குத் தந்தையான அவரது கணவர், இன்னும் அதே 22 வயது இளைஞன் போல இளமையோடு காட்சியளிக்கிறார். “மனசாட்சி இல்லாம இப்படியா ஒரு பெண்ணை அடுத்தடுத்து கர்ப்பமாக்கி சித்திரவதை பண்ணுவாங்க?” என்று இந்த புகைப்படத்தைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து ஏற்படும் பிரசவங்களின் பாரமும், வலிகளும் எப்போதும் ஒரு தாயின் உடலிலும் மனதிலும் மட்டுமே எழுதப்படுகின்றன, தந்தையின் உடலில் அல்ல என்பதை இந்த தம்பதியின் தோற்றமே அப்பட்டமாக உணர்த்துகிறது. தாய்மை என்பது அழகானதுதான், ஆனால் அது ஒருபோதும் ஒரு தாயின் ஆரோக்கியத்தை அழித்து வரக்கூடாது என்றும், ஒவ்வொரு தாயின் உடல்நலத்திற்கும் குடும்பத்தினர் முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.