பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வசதிக்காக அந்த அலுவலகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
அலுவலக வளாகத்திற்குள் சென்ற முதல்வர், அங்குள்ள கொள்கை தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இ-சேவை மையம் எவ்வாறு செயல்படுகிறது, புகார்கள் பெறப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக, அங்கிருந்த பணியாளர்களின் தோளில் தட்டி உற்சாகப்படுத்தியதோடு, பொதுமக்களுக்குத் தனது கையாலேயே சான்றிதழ்களை வழங்கி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
