இந்திய இரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான பெட்ஷீட்கள், துண்டுகள், போர்வைகள் மற்றும் தலையணைகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையின்படி, பயணிகளால் எடுத்துச் செல்லப்பட்ட இந்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹104.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுப் பட்டியலில் முகம் துடைக்கும் துண்டுகள் 46.54 லட்சம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக பெட்ஷீட்கள், தலையணை உறைகள் 23.59 லட்சம் போர்வைகள் ஆகியவை வரிசையாக அதிகளவில் காணாமல் போயுள்ளன.

அதோடு இரயில்வேயின் 54 கோட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட இந்தத் தரவுகளின்படி, கடந்த 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கோட்டங்களில் ராஜஸ்தானின் பிகானேர் கோட்டத்தில் தான் மிக அதிகபட்சமாக 25.76 லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தென்னக இரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மற்றும் பாலக்காடு கோட்டங்களில் ஒரு பொருள் கூட திருடு போகாமல் ‘பூஜ்ஜிய’ திருட்டு பதிவாகியுள்ளது. இந்த பெரும் நிதி இழப்பீடு அனைத்தும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதோடு, அது பெரும்பாலும் தினக்கூலி அடிப்படையில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஏசி கோச் உதவியாளர்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுவதுதான் இதில் உள்ள மிக வருத்தத்திற்குரிய விஷயம்.

இந்நிலையில் தற்போது இந்தத் திருட்டுகளைத் தடுக்க சிசிடிவி கண்காணிப்பு, ‘கோச் மித்ரா’ செயலி மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகள் போன்ற தீவிர நடவடிக்கைகளை இரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.