மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில், சினிமா பாணியில் ஓடும் பேருந்தை மறித்து ஓட்டுநரை வாலிபர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து பத்னாபூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, சாலையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் கை காட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்து நின்றதும் உள்ளே புகுந்த அந்த வாலிபர், தனக்குத் தெரிந்த ஒரு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாகப் பேருந்திலிருந்து கீழே இறக்கியுள்ளார். இந்த விசித்திரமான செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர், “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வளவுதான், ஓட்டுநர் கேள்வி கேட்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த வாலிபர், கெட்ட வார்த்தைகளால் ஓட்டுநரை திட்ட  ஆரம்பித்தார். சற்றும் எதிர்பாராத நேரத்தில், பேருந்து ஓட்டுநரை முரட்டுத்தனமாகக் குத்தியும், உதைத்தும் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வேடிக்கை பார்க்க, பேருந்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் அரங்கேறியது. சிலர் ஓடிவந்து சண்டையை விலக்க முயன்றபோதும், அந்த வாலிபர் அவர்களையும் மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த நடுக்கமூட்டும் காட்சியும் பேருந்தின் சிசிடிவி கேமராவிலும், ஓட்டுநரின் மொபைல் போனிலும் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, வைரல் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த  வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.