கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே , அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ அரசியல் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வெறும் 38 நாட்களில் 19 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இது தனது குடும்பக் கட்சி அல்ல என்றும், இதில் இணைந்துள்ளவர்களில் 17 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என்பதால் தங்களின் இலக்கில் 50 சதவீதத்தை ஏற்கனவே கடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் நல்லவர்கள் பணி செய்வதற்கான வாய்ப்புகள் இந்த அமைப்பில் வழங்கப்படும் என்று கூறிய அவர், வரும் ஆகஸ்ட் மாதத்தில் நதிநீர் சுத்திகரிப்பு குறித்தும், செப்டம்பரில் பெண்கள் நலனுக்காகவும் மாநாடுகள் நடத்தப்பட்டு, அடுத்த 6 மாதங்களில் 6 முக்கியப் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், 2026-ஆம் ஆண்டைப் போலவே வரும் 2031-ஆம் ஆண்டிலும் தமிழகத்தில் மற்றுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
இம்மாநாடு மற்றொரு கட்சியையோ அல்லது தலைவர்களையோ குறை கூறுவதற்காகக் கூட்டப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்திய அண்ணாமலை, தமிழகத்தில் மது அனைத்து இடங்களிலும் கலந்துவிட்டதாகவும், நடக்கும் அனைத்துப் பாலியல் குற்றங்களின் பின்னணியிலும் மதுவின் பங்கு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மாநிலத்தில் உள்ள 5200 டாஸ்மாக் கடைகளால் மது நிறைந்து காணப்படுவதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்க நினைப்பவர்களைத் தங்களது இயக்கம் தடுத்து நிறுத்தும் என்றும் கூறினார்.
இந்த அமைப்பின் ஆயுள் உள்ளவரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகத்தை தேசிய முன்னோடி மாநிலமாக மாற்றுவது உள்ளிட்ட 6 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடலும், ‘வி த லீடர்ஸ்’ செயலியும் அறிமுகம் செய்யப்பட்டன. இறுதியாக, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
