பீகார் மாநிலம், சிமிரி பக்தியார்பூர் நகரில் இஸ்லாமிய முறைப்படி தடல் புடலாகத் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள் வருகை தந்திருந்தனர். திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக முடிவடைந்த நிலையில், வந்திருந்த உறவினர்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பாக அசைவ மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் உற்சாகமாக நலம் விசாரித்துக் கொண்டு, மதிய உணவைச் சாப்பிடுவதற்காகப் பந்தியில் அமர்ந்த போதே அங்கு எதிர்பாராத விதமாகப் பெரும் களேபரம் வெடித்தது.
திருமணப் பேச்சின் போது மட்டன் கறி பரிமாறுவதாக ஒப்புக்கொண்ட நிலையில், பந்தியில் இலை விரித்தவுடன் மணப்பெண் வீட்டார் சிக்கன் கறி பரிமாறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த மணமகன் வீட்டினர், “மட்டன் போடுவதாகக் கூறிவிட்டு இப்போது சிக்கன் போட்டு ஏமாற்றுகிறீர்களா?” என்று பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களில் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் திருமண மண்டபத்திலேயே மாறி மாறி பயங்கரமாக அடித்துக்கொண்டனர். ஒருபுறம் சுடச்சுட சிக்கன் கறி தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம் சாப்பாட்டுத் தட்டுகள் பறக்க இருவீட்டாரும் கலவர பூமியாக மோதிக்கொண்ட இந்தத் தர்மசங்கடமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த அதிர்வலையுடன் வைரலாகி வருகிறது.
