டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தில், ஒரு சிறுவனின் எளிய கோரிக்கையை நிறைவேற்றிய ஒரு நபர், அந்தச் சிறுவனின் பின்னணியில் இருந்த நெகிழ்ச்சியான உண்மையை அறிந்து கண்ணீர் சிந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர விரும்பிய 7 வயது சிறுவனுக்கு, அனுப் குமார் பேடி என்ற பயணி தனது இருக்கையை விட்டுக்கொடுத்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுவன் தூங்கிவிட, இதைக் கவனித்த தந்தை, “அவன் மிகவும் சோர்வாக இருக்கிறான்” என்று வருத்தத்துடன் கூறினார்.
கடந்த எட்டு மாதங்களாக டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், கடுமையான ‘அப்லாஸ்டிக் அனீமியா’ நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதன்முறையாக வீடு திரும்புகிறான் என்ற உண்மையை அந்தத் தந்தை பகிர்ந்துகொண்டபோது அனுப் குமார் பேடி மனம் வாடி போனார்.
அந்தச் சிறுவன் ஏன் ஜன்னல் இருக்கையை விரும்பினான் என்பதைக் கேட்டபோது, அங்கிருந்த அனைவரும் உருகிப்போயினர். “மேகங்களுக்கு மேலே சென்றால் நான் கடவுளுக்கு அருகில் இருப்பேன், அப்போது என்னைக் குணப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி சொல்ல முடியும்” என்று அந்தச் சிறுவன் தன்னிடம் கூறியதாகத் தந்தை தெரிவித்தார். ஒரு சாதாரணப் பயணமாகத் தொடங்கிய அந்த நிகழ்வு, ஒரு சிறுவனின் மனவலிமையையும், உயிரைக் காக்க அவன் நடத்திய போராட்டத்தையும் உணர்த்தியதாக அனுப் குமார் பேடி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அன்றாடம் பார்க்கும் பல மனிதர்களுக்குப் பின்னால் சொல்லப்படாத வலிகள் ஒளிந்திருக்கலாம் என்றும், மற்றவர்களைத் தீர்ப்பிடும் முன் பரிதாபத்தோடும் அன்போடும் அணுக வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சம்பவம் தனக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
