வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் சார்பில், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ‘சார்க்’ அமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷமா ஒபாயத் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற இக்கூட்டத்தில், இந்தியாவுக்கான வங்கதேச முன்னாள் தூதர் அகமது தரீக் கரீம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதி தவறாகக் காண்பிக்கப்பட்டிருந்ததை, கூட்டத்தில் கலந்துகொண்ட டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் பூஜா குமாரி ஜா உடனடியாகக் கவனித்தார்.
உரையாடலின் போதே குறுக்கிட்ட இந்திய பெண் அதிகாரி பூஜா குமாரி ஜா, “இங்கு வைக்கப்பட்டுள்ள வரைபடம் சரியானது அல்ல; ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஆனால், வரைபடத்தில் அவ்வாறு குறிப்பிடாமல் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று மிகத் துணிச்சலாகச் சுட்டிக்காட்டினார். அதற்கு விளக்கமளித்த கரீம், “இது வெறும் விளக்க நோக்கங்களுக்காக வைக்கப்பட்ட வரைபடம் மட்டுமே, உண்மையான எல்லைகளைக் குறிப்பதல்ல” எனக் கூறிவிட்டு, பூஜாவிடம் அவர் இந்தியாவைச் சேர்ந்தவரா என்று வினவினார். அதற்கு பூஜா தான் இந்திய தூதரக அதிகாரி என்பதை உறுதிப்படுத்திய நிலையில், “நீங்கள் சுட்டிக்காட்டிய விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டது” என்று கரீம் பதிலளித்து தனது உரையைத் தொடர்ந்தார். சர்வதேச அரங்கில் இந்திய எல்லையின் இறையாண்மையை இந்திய அதிகாரி உடனடியாக நிலைநாட்டிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
