தூத்துக்குடியைச் சேர்ந்த 69 வயது முதியவரான வின்சென்ட் ஜான் என்பவர், நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த வழக்கில் ஒடிசா மாநில  காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றியபோது ஒரு நட்சத்திர ஓட்டலில் தனக்கு நேரிட்ட அவமானத்திற்குப் பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் ஸ்டார் ஓட்டல்களை ஏமாற்றுவதையே இவர் தனது முழுநேரத் தொழிலாக மாற்றியுள்ளார்.

தனது கண்ணியமான தோற்றம் மற்றும் சரளமான ஆங்கில அறிவைப் பயன்படுத்தி தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஓட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறும் இவர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். இவரது நூதன திருட்டு பாணி மிகவும் விசித்திரமானது; ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார்.

வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி  ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் தங்கி, ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ.63,755 பில் தொகையைச் செலுத்தாமல் தப்பியுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  போலீசாரால் இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.