ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சுனில் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு திருப்பதி பத்மாவதி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்குச் சுனில் வந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த சுனிலின் மாமியார் சம்பூர்ணம்மா, தனது மகளின் திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்த எற்பேட்டைச் சேர்ந்த முனிரத்தினம் யாதவ் (41) மற்றும் அவரது நண்பரான ஜீப் ஓட்டுநர் மணிகண்டா (35) ஆகியோரிடம் விபரத்தைக் கூறி நியாயம் கேட்கும்படி அனுப்பியுள்ளார்.

மண்டபத்திற்குச் சென்ற முனிரத்தினமும், மணிகண்டாவும் சுனிலைச் சந்தித்து, மனைவியைப் பிரிந்து வாழ்வது குறித்துக் கடுமையான வார்த்தைகளால் நியாயம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுனில், உடனடியாகத் தனது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்து அங்கு வரவழைத்துள்ளார். நள்ளிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுனிலின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், மண்டப வாசலிலேயே முனிரத்தினம் மற்றும் மணிகண்டாவைச் சரமாரியாகக் கத்தியால் குத்தித் தள்ளினர். இதில் முனிரத்தினம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்; பலத்த காயமடைந்த மணிகண்டா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பதி கிழக்கு போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சுனில், வாசு தேவையா மற்றும் உபேந்திரா ஆகிய 3 பேரை அதிரடியாகக் கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.