இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த முறை மைதானத்திற்குள் அல்லாமல், அவரது சகோதரி ஸ்ரேஸ்தா ஐயரின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கை மூலமாக வெடித்துள்ளது. இந்திய அணியின் தோல்விகளுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தொடர்ந்து பலிகடா ஆக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, “ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய உடைமாற்றும் அறையில் 10 பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்” என்று அவரது ரசிகர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை, ஸ்ரேஸ்தா ஐயர் ‘லைக்’ செய்துள்ளார். சக வீரர்களைப் பாம்புகளுடன் ஒப்பிட்ட இந்த பதிவை ஸ்ரேஸ்தா லைக் செய்ததைக் கவனித்த ரசிகர்கள், அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிர்ந்து வருவதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தனது சகோதரனுக்கு ஆதரவாக ஸ்ரேஸ்தா ஏற்கனவே குரல் கொடுத்துள்ளார். கிரிக்கெட் என்பது ஒரு தனிமனித விளையாட்டு அல்ல என்றும், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களும் கூட தங்கள் தற்காலிக மோசமான காலக்கட்டங்களைச் சந்தித்துள்ளனர் என்றும் அவர் ஒரு சுட்டிக்காட்டியிருந்தார். முன்னதாக, ஐபிஎல் 2026 தொடரின் போது பஞ்சாப் கிங்ஸ் ஜெர்சியை அணிந்து அவர் வெளியிட்ட ஒரு ஜாலியான வீடியோவால் பெரும் நெட்டிசன் வேட்டைக்கு ஆளான ஸ்ரேஸ்தா, தனக்கு கொலை மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், துபாயில் உள்ள தனது அலுவலக சகாக்களுக்கு கூட அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், வீரர்களின் குடும்பத்தினரை ஆன்லைன் வெறுப்புப் பிரச்சாரங்களுக்குள் இழுக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
