இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் உள்ள ஹாம்ப்சயர் போல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரையான் டென் டோஷேட் முதல்முறையாகப் பொதுவெளியில் விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த கேப்டனாகச் செயல்பட்ட போதிலும், அவரது தற்போதைய வயது மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையைக் கணக்கில் கொண்டே இந்தச் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தை நோக்கிய புதிய அணியை உருவாக்குவதற்காகவே இந்தச் சங்கடமான முடிவு எடுக்கப்பட்டதாகவும், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இல்லாததால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய இளம் அணி செட்டாவதற்குச் சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய 6 டி20 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல், வரலாற்றிலேயே முதல்முறையாகத் தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த விளக்கம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.