குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர, சொந்தமாக விசாரணை நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு பள்ளியில், 8 வயது சிறுமிக்கு சீனியர் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் நேரடியாகப் புகார் அளித்துள்ளார்.
ஆனால், சட்டப்படி போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டிய தலைமை ஆசிரியை, சிறுமியின் ரகசிய உறுப்புகளைச் சோதித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட மாணவனிடமும் விசாரித்துவிட்டு, “அப்படி ஒன்றும் நடக்கவில்லை” என்று தனக்குத்தானே ஒரு முடிவுக்கு வந்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மாணவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் இருந்து தலைமை ஆசிரியையை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆசிரியை மீதான குற்றவியல் விசாரணையை மீண்டும் தொடர உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் தாயார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்சோ சட்டப்பிரிவு பாதிக்கப்பட்ட குழந்தையிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும், அதைக் கேட்டவுடனேயே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது சட்டரீதியான கடமை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. “உண்மையைக் கண்டறிகிறேன்” என்ற பெயரில் தனியார் நபர்கள் தனியாக விசாரணை நடத்த போக்சோ சட்டம் அனுமதிக்காது என்றும், அவ்வாறு செய்வது ஆதாரங்களை அழிப்பதற்கும், போலீஸ் விசாரணையை முடக்குவதற்கும் வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி நேரடியாகத் தலைமை ஆசிரியையிடம் மட்டுமே புகார் அளித்ததால், அவர் மீது மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும்; பள்ளி முதல்வர், வார்டன் போன்றோருக்கு நேரடித் தகவல் இல்லாததால் அவர்கள் மீதான விடுவிப்பு உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தெரிந்தும் புகார் அளிக்காத சிறுமியின் அக்கா மற்றும் பள்ளி ‘ஹெட் கேர்ள்’ ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் போக்சோ சட்டப்படி மைனர் குழந்தைகளுக்கு இதில் குற்றவியல் பொறுப்பு கிடையாது. போக்சோ சட்டப்பிரிவு 21-ன் படி, குற்றத்தை மறைக்கும் நபர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
