பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள படேல்பாசா கிராமத்தில், குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த பொந்திலிருந்து திடீரென 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கோப்ரா  ஒன்று அதன் 17 குட்டிகளுடன் வெளியேறிய சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே நேரத்தில் இத்தனை விஷப்பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது.

கிராம மக்கள் கொடுத்த அவசரத் தகவலின் பேரில், ஜமால்பூரைச் சேர்ந்த பிரபல பாம்பு மீட்புப் படை வீரர் கரண் பால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடிப் பாம்புகளையும் அதன் குட்டிகளையும் சாதுரியமாகப் பிடித்தார்.

மீட்கப்பட்ட 18 பாம்புகளும் பாதுகாப்பாகப் பைகளில் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்ட பின்னரே கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்தியாவின் மிகவும் ஆபத்தான ‘பிக் ஃபோர்’  விஷப்பாம்புகளில் ஒன்றான இந்த கோப்ரா கடித்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சை தராவிடில் மரணம் நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.