தன்னை படுகொலை செய்வதற்கு ஈரான் நாடு பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகவே தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது உயிருக்கு ஈரானால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும், பாதுகாப்புப் படைகளும் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் படைகளும் தற்போது தன்னைச் சுற்றி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், ஒருவேளை ஈரானின் இந்தச் சதியால் தனக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால், அது ஈரானுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் நாட்டின் இந்த தொடர் அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அமெரிக்க ராணுவமும் உளவு அமைப்புகளும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ள டிரம்ப், தன்னைச் சுற்றிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுதல் ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் இதற்காக ஒருமனதாக நிதி ஒதுக்கீடு செய்து தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தன்னை முழுமையாகப் பாதுகாத்து வரும் அமெரிக்க உளவுத்துறை மற்றும் ரகசியப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள அவர், ஈரானின் எந்தவொரு சதித்திட்டமும் தன்னை வீழ்த்திவிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.