மேற்கு வங்கத்தில் உள்ள தேநீர்க் கடைகளில் கண்ணாடி ஜாடிகளில் அடைக்கப்பட்டு, மென்மையான பட்டர் பேப்பரில் சுற்றப்பட்ட சிறிய, சதுர வடிவ டிஃபின் கேக்குகள் தலைமுறை தலைமுறையாக தொழிலாளர்களின் பிரிக்க முடியாத காலை உணவாக இருந்து வருகின்றன. ‘பாபுஜி கேக்’ என்று அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற கேக், பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு முன்பே 1973-ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமானது.

தொழிலதிபர் அலகேஷ் ஜானா என்பவரால் ஹவுராவில் “நியூ ஹவுரா பேக்கரி” தொடங்கப்பட்டு, வெறும் 60 பைசா விலையில் இந்த முதல் கேக் விற்பனைக்கு வந்தது. சாமானியர்களும் கேக் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளை எளிதாக வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், மூலப்பொருட்களின் விலை உயர்வையும் தாண்டி வெறும் 8 ரூபாய் விலையிலேயே இதனை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.

சுமார் 65 கிராம் எடையுள்ள இந்த பாபுஜி கேக் மைதா, மார்கரின், முட்டை, சர்க்கரை மற்றும் டூட்டிஃப்ரூட்டி கொண்டு பாரம்பரிய பிரிட்டிஷ் முறையில் தயாரிக்கப்படுகிறது. ரசாயனம் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், இதன் ஆயுட்காலம் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே ஆகும். பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக மக்கும் தன்மை கொண்ட மென்பேப்பரையே இன்னமும் பயன்படுத்தி வரும் இந்நிறுவனம், லாப நோக்கத்திற்காகக் கேக்கின் அளவையோ தரத்தையோ குறைக்காமல், அதிக உற்பத்தியின் மூலமே செலவுகளைச் சமன் செய்கிறது. மேலும் ஆன்லைன் டெலிவரி மூலமும் தங்களுடைய தொழிலை இவர்கள் விரிவுபடுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.