தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கைத் தராமல் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து விடுவிக்கத் தயார் என த.வெ.க அரசு காங்கிரஸை எச்சரிக்குமா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், இந்தியாவிலேயே திமிர்த்தனமும், அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும் கொண்டு சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் ஒரே ஆட்சியாளர்களாக கர்நாடக காங்கிரஸ் அரசு திகழ்வது நம் நாட்டின் சாபக்கேடு என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக டெல்டா மாவட்ட விவசாயமும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையும் காவிரியையே நம்பியிருக்கும் நிலையில், காவிரி நதிநீர் தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளைத் தொடர்ந்து கர்நாடக அரசு உதாசீனப்படுத்தி வருவதாகவும், அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பால்தான் கர்நாடக மாநிலம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மறந்துவிடக் கூடாது என்றும் இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வாறு உத்தரவிடவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுவது வடிகட்டிய பொய் என்று சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, நீதிமன்ற வழிகாட்டுதலை கர்நாடகம் அமல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிப்பதே மேலாண்மை ஆணையத்தின் பணி என்பதை அவர் மறைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு த.வெ.க அரசின் முதலமைச்சர் உடனடியாக வலியுறுத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் விளையாடும் இந்த அரசியல் விளையாட்டை த.வெ.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற சிலப்பதிகார வரிகளைக் குறிப்பிட்டு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து தவறி மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அறநெறியே எமனாக மாறித் தண்டிக்கும் என தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில ஆட்சியாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
