சாலைகளில் நடக்கும்போது அல்லது வாகனங்களை இயக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவின் முக்கிய நகரான விஜயவாடாவில் உள்ள ஒரு பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் நபர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் தனது சட்டைப் பையிலிருந்து கைபேசியை வெளியில் எடுத்து, அதில் முழு கவனத்தையும் செலுத்தியபடி சாலையைக் கடந்துள்ளார். கைபேசியில் மூழ்கியிருந்ததால், பின்னால் அதிவேகமாக வந்த பேருந்தை அவர் கவனிக்கத் தவறிவிட்டார்.
మొబైల్ చూస్తూ నడవడం వల్ల విజయవాడలో ఘోర రోడ్డులో ప్రమాదం. #Vijayawada pic.twitter.com/GEDSdleUX0
— Kalyan Babu (@SannidhiBrother) July 9, 2026
கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்து, சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது மிகக் கொடூரமாக மோதி, அவரை அடியில் போட்டு நசுக்கியபடி முன்னோக்கிச் சென்றது. விபத்து நடந்த அடுத்த வினாடியே, பின்னால் வந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியதால், அந்த நபர் மேலும் நசுக்கப்படாமல் நூலிழையில் காப்பாற்றப்பட்டார்.
இந்த விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இக்கோர விபத்தின் மொத்த காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகி பார்ப்போரின் உடம்பை நடுங்க வைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
