சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், அவரது பேட்டிங் ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என முதன்முறையாக டி20 தொடரை இழந்தது, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அடுத்தடுத்து 2 போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி குறித்து சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவரது தங்கையும் நடிகையுமான ஸ்ரேஷ்டா ஐயர் பாட்காஸ்ட் நேர்காணலில் தனது அண்ணனுக்கு ஆதரவாகப் பேசினார்.
கிரிக்கெட்டில் பிட்ச் தன்மை, டாஸ் போன்ற பல விஷயங்கள் உள்ளன என்றும், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் போன்ற லெஜெண்ட்களும் பல போட்டிகளில் தோற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஸ்ரேயாஸை மட்டும் குறிவைப்பவர்களுக்கு அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
