சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவரது அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 22 பவுன் தங்க நகைகளைத் தனது அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்குமாறு பன்னீர்செல்வன் கூறியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது அண்ணி வீட்டில் இருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, பன்னீர்செல்வன் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படாததால், வீட்டில் உள்ளவர்களே இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, பன்னீர்செல்வனின் அண்ணனின் 3-வது மகளான 18 வயது பெண் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின. கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது, அந்தச் சிறுமி ஒரு தற்காலிக வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை செய்த செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.
இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், “எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவச் செலவிற்குப் பணம் தேவைப்படுகிறது” என்று கூறி சிறுமியிடம் நயமாகப் பேசியுள்ளார். காதலனின் வார்த்தைகளை உண்மையாக நம்பிய அந்தச் சிறுமி, வீட்டில் யாருக்கும் தெரியாமல் நகைகளைச் சிறுகச் சிறுகத் திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் அடுத்தடுத்து பணம், நகை எனக் கேட்கவே, வீட்டில் இருந்த மொத்தம் 129 பவுன் நகைகளையும் சிறுமி அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமியிடம் இருந்து வாங்கிய நகைகளை கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனர். அந்தப் பணத்தில் புதிதாக கார், இருசக்கர வாகனம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி அவர்கள் ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
