திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி (19), சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் பெருமாள் (23) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மகளைக் கண்டிக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்குப் பாதுகாப்பு கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது. மகளின் திருமணச் செய்தி அறிந்து பதறியடித்துக் கொண்டு காவல் நிலையம் வந்த பெற்றோர், தன் மகளின் காலில் விழுந்து தங்களுடன் வீட்டிற்கு வருமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சினர்.
இருப்பினும், பெற்றோர் காலில் விழுந்து கதறியும் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாத மாணவி, தன் காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். இதனால் காவல் நிலைய வளாகத்தில் பெரும் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்திய போலீசார் பெற்றோரைச் சமாதானம் செய்து வெளியேற்றினர்.
View this post on Instagram
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, பெருமாளின் நடத்தை சரியில்லை என்றும், ஊரில் அவரைப் பற்றி யாரும் நல்லவிதமாகச் கூறவில்லை என்றும் சாலையில் உருண்டு அழுது கதறினார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்த நிலையில், மாணவி தன் காதலனுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாகக் கூறியதால், போலீசார் அவரை பெருமாளுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
