இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும் கார்த்திக் சர்மா என்ற சமூக வலைதள கிரியேட்டர், மாலில் உள்ள பொதுமக்களை ஏமாற்றி ‘பிராங்க்’ வீடியோ எடுத்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி போலவே தனது தலைமுடி ஸ்டைல், டாட்டூக்கள் ஆகியவற்றை மாற்றிக் கொண்டதோடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியையும் அணிந்து கொண்டு கார்த்திக் சர்மா இந்த பிராங்க்கை செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ‘லுலு மால்’ வளாகத்திற்குள் சொகுசான பிஎம்டபிள்யூ காரில், நான்கு தனிநபர் பாதுகாவலர்களுடன் அவர் நுழைந்துள்ளார். அவரை நிஜமான விராட் கோலி என்று தவறாகப் புரிந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், செல்ஃபி எடுப்பதற்காக அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்து கொண்டனர். மாலின் பல அடுக்கு மாடிகளில் இருந்தும் மக்கள் பால்கனிகளில் நின்று ‘கோலி’ என நினைத்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
View this post on Instagram
பொதுமக்களை மட்டுமின்றி, அந்த மாலின் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகளையும் கார்த்திக் சர்மா ஏமாற்றியுள்ளார். மாலின் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்களது முக்கியப் பணிகளை விட்டுவிட்டு, கூட்டத்தை விலக்கி இவருக்குப் பாதுகாப்பு கொடுக்க ஓடிவந்ததாக அவரே தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஜூலை 6-ஆம் தேதி, “இந்தியாவின் மிகப்பெரிய மாலில் பிராங்க்” என்ற தலைப்புடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும், பல தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. உண்மையான விராட் கோலியைச் சந்திக்க வேண்டும் என்ற ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடி ஏமாற்றியுள்ளதாகப் பலர் கார்த்திக் சர்மாவைச் சாடியுள்ளனர். மேலும், பொது இடத்தில் இது போன்ற தேவையற்ற கூட்ட நெரிசலை உருவாக்குவது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மாலில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தாய் முடியும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
