பொதுவாக இருசக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ள நிலையில், சில நேரங்களில் விதிகளையெல்லாம் மீறி மூன்று பேர் வரை பயணிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரே பைக்கில் ஒட்டுமொத்தக் குடும்பமே பயணிக்கும் நம்ப முடியாத காட்சி வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரே இருசக்கர வாகனத்தில் மொத்தம் 9 பேர் அமர்ந்து கொண்டு சாலையில் சாதாரணமாகப் பயணம் செய்கின்றனர். இந்த விசித்திரமான மற்றும் ஆபத்தான வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வீடியோவை உற்று நோக்கினால், பைக் ஓட்டும் நபர் வண்டியின் ஹேண்டில் பாருக்கு மிக அருகில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருப்பது தெரிகிறது. அவருக்குப் பின்னால் ஒரு பெண் அமர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நடுவில் இரண்டு சிறிய குழந்தைகள் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பைக்கில் பயணிப்பவர்கள் தங்களின் மடியிலும், இருபுறங்களிலும் சேர்த்து மேலும் ஐந்து குழந்தைகளைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்.

 

இப்படியாக மொத்தம் 9 பேர் அந்த ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சி பார்ப்பவர்களைக் கண் இமைக்க மறக்கச் செய்கிறது. எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, “இவரே ஒரு கால்பந்து அணியை உருவாக்கிவிடுவார் போல” என்று நகைச்சுவையான கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதால் இது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் சிலர் “பைத்தியக்காரத்தனம்” என்று கமெண்ட் செய்துள்ளதோடு, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் உயிரையும் பணையம் வைத்துச் செல்லும் இந்த விபரீத பயணம் கடுமையான விபத்திற்கு வழிவகுக்கும் என்றும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.