தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க-வுக்கு அடுத்தடுத்து பெரும் தலைவலிகள் ஏற்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-விலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் கே.பி.எஸ். ராஜா, அ.தி.மு.க தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

தனக்கு மக்கள் பணியாற்ற முழுத் தகுதியும், மக்கள் செல்வாக்கும் இருந்தபோதிலும், உள்நோக்கத்துடன் தனக்கு இரண்டு முறை M.L.A சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக அவர் பகிரங்கமாகத் சாடியுள்ளார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தனக்கு வழங்கப்பட்ட அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் பதவியைக் காரணமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பறித்தது தனக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை பணத்திற்கு மட்டும்தான் மரியாதை தருகிறார்; எங்களைப் போன்று கழகத்திற்காக உழைப்பவர்களுக்கு அங்கே எவ்வித மரியாதையும் கிடையாது” என்பதை உணர்ந்து கொண்டதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கடிதத்தில் கே.பி.எஸ். ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இவருடன் இணைந்து முன்னாள் அந்தியூர் யூனியன் சேர்மன் சி.அப்பாநாயக்கர், முன்னாள் கவுன்சிலர் பா.சிவக்குமார், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் P.G.தேவராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் P.A.பழனிச்சாமி, அம்மா பேரவை நிர்வாகி T.N.கணேசன், சேத்துநாமபாளையத்தைச் சேர்ந்த C.ராமசாமி, முன்னாள் வார்டு கவுன்சிலர் P.ராஜேஸ்வரி பழனிச்சாமி உள்ளிட்ட அந்தியூர் பகுதியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அ.தி.மு.க-விலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமியின் சொந்தப் பந்தங்களே அவருக்கு எதிராகக் கொதித்தெழுந்து, கட்சியை விட்டு வெளியேறி வருவது தமிழக அரசியல் வட்டாரத்திலும், அ.தி.மு.க உள்கட்சியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.