தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க-விலிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், மேலும் 5 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மிக விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகவெற்றி கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க தரப்பில் இருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்துள்ள சூழலில், கே.சி.பழனிசாமியின் இந்த புதிய தகவல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, த.வெ.க-வுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள அந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, “கட்சியை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, முறைப்படுத்தி, மீண்டும் வலுப்படுத்த வேண்டும்” என்று அவர்கள் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவர்களின் இந்த கோரிக்கைக்குச் சற்றும் எதிர்பாராத விதமாகப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் அனைவரும் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறுங்கள்” என்று கறாராகக் கூறி அனுப்பியதாகக் கே.சி.பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் எடப்பாடியின் இந்த அதிரடிப் பதிலால் அதிர்ச்சியடைந்துள்ள அந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் யாராக இருக்கும் என்ற கேள்வி தற்போது அ.தி.மு.க உள்கட்சிக்குள்ளும், அரசியல் வட்டாரத்திலும் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. மேலும் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும்  ஐந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரை பதிவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.