டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜில் கர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு தம்பதியினரின் இடையே நடந்த உரையாடலை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார்.

அந்தப் பெண்மணிக்குத் தண்டுவடத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு காரணமாக, இரண்டு கால்களும் மரத்துப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வலியால் துடித்த நிலையிலும், அவர் தனது குழந்தைகளையும், மாமனார் மாமியாரையும் கவனித்துக் கொண்டு, தொடர்ந்து வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஜில் கர், “இனிமேலும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலோ அல்லது தரையில் அமர்ந்தாலோ பக்கவாதம் வர வாய்ப்புள்ளது, உடனே முழு ஓய்வு தேவை” என்று எச்சரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணின் கணவன், “வீட்டு வேலைகளைச் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? எங்கள் வீட்டு சமையல் அடுப்பு தரையில்தான் இருக்கிறது, அவர் குனிந்துதான் ஆக வேண்டும்” என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், “அடுப்பை மேஜை மீது வையுங்கள், அவருக்கு ஓய்வு கொடுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அந்த நபரோ, “நீங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு மாத்திரையை மட்டும் கொடுங்கள்” எனத் திமிராகப் பேசியுள்ளார்.

அந்தப் பெண் படிக்காதவர் என்பதால், மருந்து மாத்திரைகளுக்குக் கூட அந்த இரக்கமற்ற கணவனையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஜில் கர், பெண்கள் அனைவரும் தங்களைப் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தற்சார்புடையவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.