பெங்களூரு நகரின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு நகருக்குள் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க அவருக்குப் 2.5 மணி நேரம் ஆகியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், பெங்களூருவின் போக்குவரத்து நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாகவும், மோசமான சாலைகளும், மக்களிடம் இருக்கும் ஓட்டுநர் ஒழுக்கமின்மையுமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே, தினசரி இந்த டிராபிக்கில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தங்களின் சொந்த நரக வேதனை அனுபவங்களை கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர். சாலையின் விதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சரியாகும் வரை ஐடி நிறுவனங்கள் மீண்டும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’முறையைக் கொண்டு வர வேண்டும் என்று சிலரும், மக்கள் வார இறுதி நாட்களிலாவது கார்களைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ மற்றும் பேருந்துகளைப் பயன்படுத்த பழக வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுட்டு வருகின்றனர்.
31 km took 2 1/2 hours today. It is only becoming worse. Traffic, condition of roads, and poor discipline
— kris gopalakrishnan (@kris_sg) July 4, 2026
இந்த போக்குவரத்து விவாதங்களுக்குப் பின்னால் இருக்கும் புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த பெங்களூருவின் அவல நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. டாம்டாம் டிராபிக் குறியீட்டின்படி, உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு 74.4% போக்குவரத்து நெரிசல் அளவு பதிவாகியுள்ளதோடு, பீக் ஹவர்ஸில் வாகனங்களின் வேகம் மணிக்கு வெறும் 13.9 கி.மீ என்ற அளவிலேயே முடங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக, பெங்களூரு வாகன ஓட்டிகள் ஒரு வருடத்தில் சராசரியாக 168 மணி நேரத்தை, அதாவது ஒட்டுமொத்தமாக 7 முழு நாட்களை வெறும் டிராபிக் ஜாமில் மட்டுமே தொலைக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
