தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் நுஸ்துலாப்பூர் கிராமத்தில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் பழக்கத்தால் ஏற்பட்ட கடன் சுமையை அடைப்பதற்காக 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் செய்த கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தினேஷ் ரெட்டி என்ற அந்த மாணவன், 55 வயதான தங்கராலா லட்சுமி என்ற தினக்கூலி பெண் தொழிலாளியிடம் விவசாய வேலை இருப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அப்பெண்ணிடமிருந்த தங்க தாலிச்சங்கிலி மற்றும் கம்மல்களைக் கொடூரமாகப் பறித்துக் கொண்டதோடு, தன்னை அடையாளம் காட்டிவிடுவார் என்ற பயத்தில் அவரை அங்கிருந்த ஒரு பாழடைந்த விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இருப்பினும், கிணற்றுக்குள் விழுந்த அந்தப் பெண்மணி மன உறுதி தளராமல், கிணற்றின் மோட்டார் பைப் லைனில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு விடிய விடிய போராடியுள்ளார். சுமார் 21 மணி நேரம் மரணப் போராட்டத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை அந்த வழியாக வந்த உள்ளூர் விவசாயிகள் அவரது குரல் கேட்டு அவரைப் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கரீம்நகர் ஊரகப் போலீஸார், குற்றவாளியான தினேஷ் ரெட்டியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.