ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ⁠சுமார் 40 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் வாலிபருக்கு முறையான மருத்துவக் கவனிப்பு வழங்கப்படாததால் கடுமையான தொற்று ஏற்பட்டு, பின்னர் அவர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறி உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு, வெறும் கால் முறிவு சிகிச்சைக்காக அந்த மருத்துவமனை நிர்வாகம் சுமார் ₹22 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்களுக்கு நீதி வேண்டியும் உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு முன்பு திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by dinaulagam (@dinaulagam_24x7)

“>

இந்த விவகாரம் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் பரவி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அரங்கேறியுள்ள மருத்துவ அலட்சியம் மற்றும் சாமானியர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கான அதிகப்படியான மருத்துவக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்பொழுது வலுத்து வருகின்றன.