இந்திய ஆடவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 வயது இளம் பேட்டிங் புயல் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் வெறும் 15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்களில் களமிறங்கியதன் மூலம், மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரர் என்ற வரலாற்று மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் ஒன்று கூடி நின்ற உருக்கமான தருணத்தில், அணியின் துணை கேப்டன் திலக் வர்மா வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது முதலாவது இந்திய தொப்பியை வழங்கி கௌரவித்தார். சக வீரர்கள் அனைவரும் கைதட்டி இந்த இளம் வீரரைக் கட்டிப்பிடித்து வாழ்த்தியபோது, உணர்ச்சிப் பெருக்கால் வைபவ் சூர்யவன்ஷியால் தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இடதுகை ஓப்பனராகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.
அந்தத் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 237.30 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் 1 சதம், 5 அரைசதங்கள் மற்றும் சாதனை அளவாக 72 சிக்ஸர்களுடன் மொத்தம் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்று அசத்தினார். இந்த அசாத்தியமான ஃபார்ம் காரணமாகவே அவர் தற்பொழுது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடர்களில் சேர்க்கப்பட்டார்.
இதன் மூலம் 16 ஆண்டுகள் 205 நாட்களில் அறிமுகமான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 17 ஆண்டுகள் 75 நாட்களில் அறிமுகமான பியூஷ் சாவ்லாவின் நீண்ட கால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தற்பொழுது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
