கிரிக்கெட் உலகில் தனது அசத்தலான பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி, இந்திய சர்வதேச அணியில் எப்போது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், சர்வதேச இந்திய அணியில் இடம் பிடித்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். இருப்பினும், அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையிலும், அவருக்கு ஆடும் லெவனில்  வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, வைபவ் சூர்யவன்சி ஒரு திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், ஐபிஎல் தொடரிலேயே அவர் அதை நிரூபித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். எனினும், ஆடும் லெவனில் யாரை சேர்க்க வேண்டும் என்ற இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கே உள்ளது என்றும், தகுந்த நேரம் வரும்போது அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி அணி நிர்வாகத்தின் முடிவை அவர் முழுமையாக ஆதரித்துள்ளார்.

மேலும் இது குறித்துப் பேசிய ராஜீவ் சுக்லா, அணி நிர்வாகத்தின் இத்தகைய முடிவுகளை அவர்களின் சுய விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையின்றி விமர்சிப்பதோ அல்லது அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிப்பதோ தேவையற்றது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை வெற்றியில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

எனவே, ஓரிரு போட்டிகளில் இவர்களின் செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், அணி நிர்வாகம் அவர்கள் மீது வைத்துள்ள நீண்ட கால திட்டமும் நம்பிக்கையும் தொடர்கிறது. இதன் காரணமாகவே, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம், தாங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள வலுவான அணி கட்டமைப்பு மற்றும் பேட்டிங் வரிசையை ஒரே ஒரு வீரருக்காக அவசரப்பட்டு மாற்ற விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.