இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, இன்று மன்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஐயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “புதிய அத்தியாயம்”  என்று அவர் பதிவிட்டுள்ள புகைப்படம், அவர் இன்று களமிறங்கக்கூடும் என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரின் கனவான தேசிய அணி அறிமுகத்தை எட்ட, வைபவ் மிக அருகில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இருப்பினும், அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் ஒரு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும்போது, அவசரமாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, சஞ்சு சாம்சனின் திறமை மற்றும் அணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், வீரர்களை ஆதரிப்பது தங்களின் கடமை என்றும் மோர்க்கல் வலியுறுத்தியுள்ளார். எனவே, வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்த முடிவை அணி நிர்வாகம் எப்போது எடுக்கும் என்பது இன்று மைதானத்தில் தெளிவாகத் தெரியும்.