புதுடெல்லி: ஸ்மார்ட்போன் வைத்துள்ள பலரின் மொபைலிலும் தஞ்சம் புகுந்துள்ள டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்போது மிக கடுமையான செக் ஒன்றை வைத்துள்ளது. டெலிகிராம் செயலி மூலம் புதிய திரைப்படங்கள் மற்றும் திருட்டு உள்ளடக்கங்கள் (Pirated Content) சட்டவிரோதமாக பரப்பப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தியேட்டர்களில் வெளியாகும் புதுப்படங்கள் உடனுக்குடன் டெலிகிராமில் கசிந்து சினிமாத்துறைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி பாய்ச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​இந்த விவகாரத்தில் திருட்டுத்தனமாக படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 3,100 டெலிகிராம் சேனல்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த சட்டவிரோத செயல்களை தடுக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டெலிகிராம் நிறுவனத்திற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவால் பல ஆயிரக்கணக்கான டெலிகிராம் சினிமா சேனல்கள் முடக்கப்படும் அபாயத்தில் உள்ளதால், நெட்டிசன்கள் மத்தியில் இதுவே தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.