மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த புவிசார் அரசியல் பதற்றநிலை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அறிவிப்புக்குப் பின் தற்போது சீரடைந்துள்ளது.
இதன் காரணமாக டெல்லி அரசு ஊழியர்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த வாரத்திற்கு 2 நாட்கள் கட்டாய ‘வீட்டிலிருந்தே வேலை’ செய்யும் முறை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் கடந்த மே மாதம் உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு வேண்டுகோளை ஏற்று டெல்லி அரசால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி அரசு ஊழியர்களுக்கான புதிய அலுவலக நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லி தேசிய தலைநகரப் பகுதி அரசு அலுவலகங்கள் இனி காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதோடு அதே நேரத்தில், டெல்லி மாநகராட்சி அலுவலக நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அது வழக்கம் போல காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
