திருவாரூர் மாவட்டம் கரும்பியூர் கிராமத்தில், கணவனின் விபரீதமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்து அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்த இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31) என்ற வாலிபர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் இவரது மனைவி காயத்ரிக்கும் (24) இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பிரவீன், மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டை விட்டு வெளியேறிய பிரவீன், எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் காட்டும் நோக்கில், தான் ஏற்கனவே டிஜிட்டல் முறையில் தயாரித்து வைத்திருந்த தன்னுடைய சொந்த ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டரைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பதிவிட்டுள்ளார். இதை எதிர்பாராதவிதமாகப் பார்த்த அவரது மனைவி காயத்ரி அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

தன் கணவர் விஷம் குடித்து நிஜமாகவே இறந்துவிட்டார் என்று நம்பிய காயத்ரி, கணவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து கதறி அழுதுவிட்டு, வீட்டின் உள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, எலி மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்த பிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கணவன்சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தவறான ஸ்டேட்டஸால் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.