உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த நபரே வீட்டு உரிமையாளரின் 6 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த வினய் சிங் என்பவரின் 6 வயது மகன் அன்சுமான், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடச் சென்றபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகாரளித்துவிட்டு, இரவு முழுவதும் குழந்தையைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது, வினய் சிங்கின் வீட்டில் ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் வாடகைக்கு குடியேறிய கல்பேஷ் ராய் என்ற நபர் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க போலீசாருடனும் குடும்பத்தினருடனும் சேர்ந்து குழந்தையைத் தேடுவது போல விடிய விடிய நாடகமாடியுள்ளார்.
ஆனால், வெள்ளிக்கிழமை மதியம் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுவன் அன்சுமானை கல்பேஷ் ராய் அழைத்துச் செல்லும் அதிர்ச்சிப் பதிவு சிக்கியது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டான். கல்பேஷ் ராய்க்கு சமீபத்தில் நூற்பு ஆலையில் இருந்த வேலை பறிபோனதாகவும், கடுமையான பண நெருக்கடியில் இருந்ததால் ரூ. 15 லட்சம் பணத்தை வீட்டு உரிமையாளரிடம் பறிக்க சிறுவனைக் கடத்தியதாகவும் கூறியுள்ளார்.
கடத்தப்பட்ட சிறுவனின் கை, கால்களைக் கட்டி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மறைத்து வைக்க முயன்றபோது, சிறுவனின் தலை சுவரில் பலமாக மோதியதால் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனால் பயந்துபோன கல்பேஷ், சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தேடுவது போல் நாடகமாடியுள்ளார். தற்போது கல்பேஷ் ராயைக் கைது செய்துள்ள போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
