இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் மற்றும் கேட்டி டோனேகன் தம்பதியினர், அதீத சிக்கனத்தைக் கடைப்பிடித்து 12 கோடி ரூபாய்க்கும் மேல் சேமித்து, தனது 40-வது வயதிலேயே முன்கூட்டியே ஓய்வு பெற்று வியக்க வைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் கடும் குளிர்காலத்திலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க ஹீட்டர்களைப் பயன்படுத்தாமல், கூடுதல் ஆடைகளை அணிந்தும், சுடுதண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தியும் குளிரைச் சமாளித்துள்ளனர்.
வெளியில் செல்லும்போது உணவகங்களில் சாப்பிடாமல் வீட்டிலிருந்தே உணவு எடுத்துச் செல்வது, பொது இடங்களில் மொபைல் போன்களை சார்ஜ் செய்வது, வீணாகக் கிடக்கும் தள்ளுபடி வவுச்சர்களைப் பயன்படுத்துவது என அவர்கள் ஒவ்வொரு பைசாவையும் திட்டமிட்டுச் சேமித்துள்ளனர்.
தங்கள் இந்தச் சிக்கன முறையைக் கண்டு பலரும் அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று கேலி செய்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் இலக்கை நோக்கி உறுதியாக இருந்தனர்.
தாங்கள் சேமித்த பணத்தை முறையாக முதலீடு செய்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் வேலையிலிருந்து விடைபெற்று சுதந்திரமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர்.
ஆடம்பரத்தைத் தவிர்த்துவிட்டுத் திட்டமிட்டுச் சேமித்தால், இளமையிலேயே நிதி சுதந்திரம் பெற்று நிம்மதியாக வாழ முடியும் என்பதற்கு இந்தத் தம்பதி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.
