சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் நம் இதயங்களை உலுக்கி, மனித நேயத்தின் மீதும், தூய்மையான காதலின் மீதும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வயதான ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அசிஷ் மேத்யூ (@asishmathew.ex) என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த முதியவர் தனது ஆட்டோ முழுவதும் மறைந்த தனது மனைவியின் பல்வேறு புகைப்படங்களை ஒட்டி,  அலங்கரித்து வைத்துள்ளார்.

அந்த நபரிடம்  பேசிய ஆட்டோ ஓட்டுநர், தனது மனைவி 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறி, அவளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் போது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு உடைந்து அழுதுள்ளார். மரணத்தைத் தாண்டியும் வாழும் அவரது இந்தத் தூய்மையான காதல் கதை, தற்போது ஒட்டுமொத்த இணையவாசிகளையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முதியவருக்கு ஒரு மகன், மருமகள் மற்றும் 6 பேரக்குழந்தைகள் எனச் சுற்றிலும் அன்பு செலுத்தப் பல சொந்தங்கள் உள்ளனர். அவரது மகன் அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு பலமுறை வற்புறுத்திய போதிலும், அவரால் மனைவியின் நினைவுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. “நான் சும்மா வீட்டில் இருந்தால், அவளது நினைவுகள் அதிகமாகி என் மனம் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கிறது; என்னால் அவளை மறக்க முடியவில்லை” என்று அந்த முதியவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே, அவர் தனது மனதை அலைபாய விடாமல் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் ஆட்டோ ஓட்டி, புதிய மனிதர்களைச் சந்தித்துத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். “அவரது காதலின் மொழி” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த உருக்கமான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் 20 லட்சத்திற்கும் (2 Million) அதிகமான வியூஸ்களையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஆயிரக்கணக்கான நெகிழ்ச்சியான கருத்துகளையும் பெற்று உலக அளவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by asish matthew (@asishmatthew.exe)