உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பிரயாக்ராஜ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, தலைகீழாகக் கவிழ்ந்து அங்கிருந்த டோல் பிளாசா பூத் மீது பயங்கரமாக மோதியுள்ளது. ஜூன் 26 அன்று காலை 7:00 மணியளவில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. கான்பூரிலிருந்து பிரதாப்கர் நோக்கிச் சென்ற அந்த டேங்கர் லாரி, லேசான மழையால் ஈரப்பதமாக இருந்த சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
டோல் பூத் மீது மோதிய அடுத்த சில வினாடிகளில் டேங்கரிலிருந்து எரிவாயு அதிவேகமாகக் கசிந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பினால் ஏற்பட்ட தீ, டோல் பிளாசாவின் அனைத்து வழிகளுக்கும், அதன் நிர்வாக அலுவலகங்களுக்கும் நொடிப்பொழுதில் பரவியது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானளாவிய உயரத்தில் எழும்பிய பிரம்மாண்ட தீப்பிழம்புகளும், அடர்ந்த கரும்புகையும் அப்பகுதி மக்களை மரண பயத்தில் ஆழ்த்தியதோடு, இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Video of the fire incident after an LPG gas tanker collided with a toll plaza in Kaushambi district, Uttar Pradesh on June 26
In this accident, the driver was burned alive. 16 motorcycles and 2 cars were burned.#Kaushambi #UttarPradesh #explosión #TruckExplosion #Tuckaccident… https://t.co/6mH8Jbyt8N pic.twitter.com/wC4Rm2mJQq
— Siraj Noorani (@sirajnoorani) July 3, 2026
இந்தக் கொடூர விபத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்; அவரது உடல் வாகனத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டோல் பிளாசா ஊழியர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், அதில் நான்கு பேருக்கு 80 சதவீதத்திற்கும் மேல் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தான் அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது.
