இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் வியூஸ்களும் (Views) லைக்குகளும் வாங்க வேண்டும் என்பதற்காக, ‘பிராங்க்’ (Prank) என்ற பெயரில் அடுத்தவர்களை வம்புக்கு இழுப்பதும், அவர்களின் உழைப்பை வைத்து விளையாடுவதும் ஒரு ஆபத்தான ட்ரெண்டாக மாறிவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த அசிங்கம், தற்போது பல இடங்களிலும் பரவி வருவதுதான் ஒட்டுமொத்த சமூகத்தையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கஷ்டப்பட்டு உழைத்து அன்றாட பிழைப்பை ஓட்டும் ஏழை இ-ரிக்ஷா ஓட்டுநர்களின் வண்டிகளை குறிவைத்து, யாரோ சில பொறுப்பற்ற நபர்கள் தங்களது மொபைல் ஆப் மூலமாக ரிமோட் முறையில் திடீரென லாக் செய்து ஆஃப் செய்து விடுகிறார்கள். சவாரி போய்க்கொண்டிருக்கும் போதே நடுவழியில் வண்டி நின்றுவிடுவதால், செய்வதறியாது திகைக்கும் அந்த ஓட்டுநர்கள், கிலோமீட்டர் கணக்கில் அந்த கனமான இ-ரிக்ஷாவை தார்ச்சாலையில் தள்ளிக்கொண்டே போகும் கொடுமை ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகிறது.
உங்களோட ஒரு வீடியோ வைரல் ஆகணும், நாலு பேர் பார்த்து சிரிக்கணும் அப்படிங்கிறதுக்காக, அடுத்தவன் ரத்தம் சிந்தி உழைக்கிற உழைப்பிலும் வாழ்வாதாரத்திலும் விளையாடுவது எவ்வளவு பெரிய அசிங்கம்? காலையில இருந்து நைட் வரைக்கும் ஓடினாலே சொற்ப காசு சம்பாதிக்க கஷ்டப்படுற ஒரு ஏழையோட ஒருநாள் வருமானத்தை, இப்படி பல இடங்களில் பிராங்க் என்ற பெயரில் கெடுப்பது அப்பட்டமான மனிதநேயமற்ற செயலாகும்.
எலக்ட்ரிக் வாகனங்களின் ‘சைபர் செக்யூரிட்டி’ (Cybersecurity) எந்தளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தாலும், அதைவிட கொடுமை பிராங்க் என்ற பெயரில் மனிதர்கள் மிருகங்களாக மாறி வருவதுதான். “வியூஸ்காக அடுத்தவன் வயித்துல அடிக்காதீங்கடா, உங்களோட ஜாலி அவங்களோட வாழ்வாதாரப் போராட்டம்” என்று ஒட்டுமொத்த இணையவாசிகளும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களைக் காரித் துப்பி, சாடி வருகின்றனர்.
