“இன்பத்திலும் துன்பத்திலும், உன்னோடு இருப்பேன்” என்று திருமணத்தின் போது எடுக்கும் சத்தியத்தை நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய ஒரு கணவனின் நெஞ்சை உருகவைக்கும் உண்மைக் காதல் கதைதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிஸ்டர் டெங் (Mr. Deng) என்பவரின் மனைவிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டி (Brain Tumor) காரணமாக ஒட்டுமொத்த உடலும் பக்கவாதத்தால் முடங்கிப் போனது.

வலியையும் வேதனையையும் தாங்க முடியாத அந்த மனைவி, “என்னை சாக விட்ருங்க, என்னைக் கொன்னுடுங்க” என்று தினமும் கண்ணீரோடு கணவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், தன் மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்ட டெங், அவளது சிகிச்சையே உலகம் என்று மாறி, தங்களின் வாழ்நாள் சேமிப்பான ஒட்டுமொத்த 40 மில்லியன் யென் (சுமார் 4 கோடி ரூபாய்) பணத்தையும் தண்ணீராக செலவழித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தார்.

​வெறும் மருத்துவம் மட்டும் ஒரு உயிரைக் காப்பாற்றிவிடாது, அதற்கு அன்பும் நம்பிக்கையும் தேவை என்பதை உணர்ந்த டெங், படுத்த படுக்கையாக இருந்த தன் மனைவியை உற்சாகப்படுத்த தினமும் அவள் கண் முன்னாடியே வித்யாசமாக நடனமாடி அவளை சிரிக்க வைத்துள்ளார். உடலை அசைக்க முடியாமல் கண்ணீரில் மூழ்கியிருந்த மனைவி, கணவனின் இந்த அர்ப்பணிப்பையும் தினசரி நடனத்தையும் பார்த்து மெல்ல மெல்ல மனதளவில் தேறத் தொடங்கினார்.

இறுதியில், மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம், அந்த கணவனின் ஓயாத அன்புக்கும் தீவிரமான கவனிப்பிற்கும் கிடைத்த பரிசாக, அந்தப் பெண் பக்கவாதத்தில் இருந்து மீண்டு, அதிசயத்தக்க வகையில் முழுமையாக குணமடைந்து எழுந்து நின்றார். “உண்மையான காதலுக்கு முன்னாடி எந்த நோயும் தோத்துப்போகும்” என்று இந்த தம்பதியின் நெகிழ்ச்சியான கதையை நெட்டிசன்கள் உலகளவில் பகிர்ந்து, அந்த கணவனுக்கு தங்களது ராயல் சல்யூட்டை அடித்து வருகின்றனர்.