உலகில் வியூஸ்காகவும், சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் ஆபத்தான காரியங்களைச் செய்யும் ‘டேர்டெவில்’ (Daredevil) ஆசாமிகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சாகச ஜோடியான ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் ஆகியோர், நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற 1,454 அடி உயர எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் (Empire State Building) உச்சிக்கு எந்தவொரு பாதுகாப்பு கயிறோ அல்லது ஹார்னஸ் (Harness) போன்ற உபகரணங்களோ இல்லாமல் மிக ஆபத்தான முறையில் ஏறியுள்ளனர்.

ஜூலை 1-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், கட்டிடத்தின் மிகக் குறுகிய உச்சப் பகுதிக்குச் சென்ற இவான், அங்கு வச்சு தனது காதலி ஏஞ்சலாவிடம் காதலை வெளிப்படுத்தி (Propose) மோதிரம் மாட்டியுள்ளார். அதோடு நிறுத்தாமல், அங்கிருந்து ஒரு பெரிய காதல் பேனரையும் பறக்கவிட்டு தங்களது காதலைக் கொண்டாடியுள்ளனர். ​பார்ப்பவர்களுக்கே நெஞ்சு படபடக்கும் வகையில் இந்த ஆபத்தான சாகசத்தை முடித்துவிட்டு அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்த உடனே, நியூயார்க் நகர போலீசார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவர்கள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து எம்பயர் ஸ்டேட் பில்டிங் நிர்வாகம் தங்களது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் இப்படி உயிரைப் பணையம் வைத்து ஏறுவதற்குப் பதிலாக, எங்களது அதிகாரப்பூர்வ $1,000 (சுமார் 83,000 ரூபாய்) ப்ரோபோசல் பேக்கேஜை வாங்கியிருந்தாலே நிம்மதியாகப் பண்ணியிருக்கலாம்” என்று செம்மயாகக் கலாய்த்துப் பதிவிட்டுள்ளது. 1400 அடி உயரத்திற்கு மேல் நின்று இந்த ஜோடி எடுத்த திக் திக் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.