தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, ஊழியர்களின் கட்டாய பிஎஃப்  பங்களிப்புத் தொகை தொடர்ந்து மாதத்திற்கு ₹1,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டப்பூர்வ மாத ஊதிய வரம்பான ₹15,000-க்கு கணக்கிடப்படும் 12 சதவீதப் பங்களிப்பான ₹1,800 மட்டுமே ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து கட்டாயமாகப் பிடிக்கப்படும். ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மாதத்திற்கு ₹1 லட்சம் வரை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அவரின் விருப்பமில்லாமல் ₹1,800-க்கு மேல் பிஎஃப் தொகையைப் பிடிக்க நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் ஊழியர் மற்றும் நிறுவனம் ஆகிய இரு தரப்பிலும் தலா ₹1,800 மட்டுமே கட்டாயமாகச் செலுத்தப்படும் என்பதால், தனியார் துறை ஊழியர்களின் கைகளுக்குக் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்க இது வழிவகை செய்கிறது. அதே நேரத்தில், ஒரு ஊழியர் ₹1,800-க்கும் மேலாகத் தனது ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்ய விரும்பினால், மீதமுள்ள சம்பளத்தில் இருந்து கூடுதல் தொகையைத் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ‘சுயவிருப்பப் பங்களிப்பாக’ செலுத்த புதிய விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

ஆனால், ஊழியர்கள் செலுத்தும் இந்த கூடுதல் தொகைக்கு இணையாக நிறுவனமும் கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அது முற்றிலும் நிறுவனத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. மேலும், இந்த கூடுதல் பங்களிப்பை ஊழியர்களும் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக நிறுத்திக்கொள்ளவோ முடியும்.

இந்நிலையில் இவற்றுடன், பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையையும் எளிமையாக்கியுள்ள EPFO, இதற்கான காரணங்களின் பிரிவுகளை 13-லிருந்து வெறும் 3 ஆகக் குறைத்துள்ளதுடன், அவசரத் தேவைகளுக்குத் தகுதியான தொகையில் 100% வரை முன்பணமாக எடுக்கவும் அனுமதி அளித்துள்ளது.