பெங்களூருவில் உள்ள கேப்கெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதுடைய பச்சிளம் குழந்தைகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்துவதற்காக, முன்பக்கக் கதவு கொண்ட வாஷிங் மெஷினுக்குள் அமர வைப்பது, கழிவறை ஜெட் ஸ்ப்ரே மூலம் அவர்களின் வாயில் தண்ணீரை அடிப்பது மற்றும் பாத்ரூமிற்குள் பூட்டி வைப்பது போன்ற மனிதாபிமானமற்ற தண்டனைகளை அங்கிருந்த பெண் காப்பாளர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் காப்பாளர்கள் மீது பெங்களூரு எச்.ஏ.எல் காவல் துறையினர் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் கொடூரம் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது என்றால், கடந்த மாதம் இந்தக் காப்பகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியரின் தோழி காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சித்திரவதைகளைத் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ ஆதாரங்கள் வாட்ஸ்அப் வழியாகப் பகிரப்பட்டு, பின்னர் குழந்தை உதவி மையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கேப்கெமினி நிறுவனம் தனது ஊழியர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறி, இந்த வளாகக் காப்பகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், முழு விசாரணைக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.