புனேவில் நடந்த 26 வயது ரியல் எஸ்டேட் தொழிலதிபரான கேதன் அகர்வால் கொலை வழக்கில், முதன்மைக் குற்றவாளியான அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி சியா கோயல் ஒரு பப்பில் பார்ட்டி செய்து கொண்டே போனில் கோபமாகப் பேசும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கடந்த ஜூன் 18 அன்று லோஹகாட் கோட்டையிலிருந்து கேதனை அவரது வருங்கால மனைவி சியாவும், அவளுடைய காதலனான சேத்தன் சௌத்ரியும் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சியாவிற்கு கேதனைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால், இருவரும் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

மேலும் இவர்களுக்கு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் நவம்பரில் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இக்கொலை அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சியாவின் இத்தகைய வாழ்க்கை முறை தங்களுக்குத் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகக் கேதனின் குடும்பத்தினர் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கை அனைத்துக் கோணங்களிலும் மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர, சியாவும் சேத்தனும் குற்றத்திற்கு முன்பு ஒன்றாக கிரிக்கெட் போட்டி பார்த்த சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தங்களது காவலில் எடுத்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.